இராமபிரான் இத்தலத்திற்கு வந்தபோது, சிவபெருமான் சுயம்புவாக தோன்றினார். இராமபிரானை சாதாரண மனிதர் என்று நந்தி தேவர் அவரைத் தடுத்தார். அம்பாள் தோன்றி உண்மையை உணர்த்த, நந்தி இராமபிரானை வணங்கி, இருவரும் வழிபாடு செய்தனர். அதனால் இத்தலம் 'இராமநந்தீஸ்வரம்' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் 'இராமனதீஸ்வரம்' என்று மருவியது.
இத்தலத்து மூலவர் 'இராமனாதீஸ்வரர்' பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'கருவார் குழலியம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், அகஸ்தியர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், காமதேனு ஆகிய சன்னதிகள் உள்ளன.
ஒருசமயம் இப்பகுதியில் வசித்து அம்மன் பக்தை ஒருவர் கர்ப்பமுற்றிருந்தாள். ஒருநாள் இரவு அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க, அச்சமயம் மழை பெய்ததால் வெளியில் சென்றிருந்த அவரது தாயார் ஆற்றின் அக்கரையில் மாட்டிக் கொண்டார். அதனால் அம்பிகையே அப்பெண்ணின் தாயார் வடிவத்தில் வந்து பிரசவம் பார்த்தாள். சூல் - கரு. அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், திருப்புகலூர், இராமனதீஸ்வரம் மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
இராமபிரான் வழிபட்ட தலம். துர்வாச முனிவர் தவம் செய்த தலம். நந்தியை அம்பாள் அணைத்ததால் சோமாஸ்கந்த மூர்த்தி மூர்த்தத்தில் அம்பாள் கையில் நந்தி குழந்தையாக காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள பைரவ மூர்த்தியை அகஸ்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|